‘உலகக் கோப்பையை’…புறக்கணிக்கும் பாகிஸ்தான்: இந்தியாதான் காரணம்…பிசிசிஐ கையில்தான் எல்லாமே!

உலகக் கோப்பையை பாகிஸ்தான் அணி புறக்கணிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆசியக் கோப்பை தொடர் அடுத்த ஆண்டில் 50 ஓவர்கள் கொண்ட ஆட்டமாக நடைபெறவுள்ளது.

ஆசியக் கோப்பை 2023 தொடரை நடத்த பாகிஸ்தானுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இலங்கை வீரர்கள் மீது பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல் நடந்ததால், பல வருடங்களாக அங்கு எந்த அணியும் செல்லாமல் இருந்த நிலையில், தற்போது படிப்படியாக அங்கு அணிகள் செல்லத் துவங்கியுள்ளது. இந்நிலையில்தான், ஆசியக் கோப்பை 2023 தொடரை நடத்தும் உரிமையை பெற்றது.

இந்திய அணி:
2005ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று தொடர்களில் பங்கேற்கவில்லை. 2011-க்கு பிறகு இரு நாடுகளும் ஐசிசி தொடர்களில் மட்டுமே பங்கேற்று வருகின்றன. இந்நிலையில், சமீப காலமாக இந்தியா, பாகிஸ்தான் வீரர்கள் இடையில் நட்புறவு நீடித்து வருவதால், ஆசியக் கோப்பை 2023 தொடரில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது.

அதற்கேற்றாற்போல் பிசிசிஐயும் விசா ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வந்தது.

திடீர் முடிவு:

இந்நிலையில், சமீபத்தில் அறிக்கை வெளியிட்ட பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, ‘‘ஆசியக் கோப்பை 2023 தொடர் பாகிஸ்தானில் நடத்தப்படாது. வேறு ஒரு பொதுவான நாட்டில் நடத்தப்படும்’’ என அதிரடியாக அறிவித்தார். இவர் பிசிசிஐக்கு செயலாளர் மட்டுமல்ல, ஆசியக் கோப்பை கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவும் இருக்கிறார். இதனால், இவரது அறிவிப்பு அதிகாரப்பூர்வமானதுதான். இந்த அறிவிப்பை கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

பாகிஸ்தான் பதிலடி:

இந்நிலையில் ஜெய் ஷாவின் இந்த அறிவிப்புக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பதிலடி கொடுத்துள்ளது. ஆம், ஆசியக் கோப்பை 2023 தொடரில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால், நாங்கள் இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை 2023 தொடரில் பங்கேற்க மாட்டோம். ஆசியக் கோப்பை 2023 தொடரையும் புறக்கணிப்போம்’’ என அதிரடியாக அறிவித்துள்ளது.

ஆப்பு:

இந்தியா, பாகிஸ்தான் அணிகள் ஐசிசி தொடர்களில் மட்டுமே பங்கேற்று வந்துள்ள நிலையில் தற்போது அதற்கும் ஆப்பு வைக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கைவிடுத்து வருகிறார்கள்.

ஜெய் ஷா கையில் முடிவு:

ஆசியக் கோப்பை கவுன்சில் தலைவராக இருக்கும் ஜெய் ஷா, தனது முடிவில் மாற்றம் கொண்டுவரவில்லை என்றால் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இனி ஐசிசி தொடர்களில் மோதுவதும் சந்தேகம்தான்.

Previous post காஞ்சி: வடமாநில தொழிலாளி மீது சரமாரி தாக்குதல் – இருவர் கைது
Next post ‘நிதி அமைச்சரை பதவியில் இருந்து நீக்குக..!’ – முதல்வருக்கு ஆளுநர் பரபரப்பு கடிதம்!