Home News ராஜேந்திர சோழன் அரண்மனை கண்டுபிடிப்பா? கங்கைகொண்ட சோழபுரம் அகழாய்வில் வெளிப்பட்ட கட்டுமானம் என்ன?

ராஜேந்திர சோழன் அரண்மனை கண்டுபிடிப்பா? கங்கைகொண்ட சோழபுரம் அகழாய்வில் வெளிப்பட்ட கட்டுமானம் என்ன?

62
0

கங்கை கொண்ட சோழபுரத்திற்கு அருகில் மாநில தொல்லியல் துறை மேற்கொண்ட ஆய்வில் சில கட்டடத் தொகுதிகள் கிடைத்துள்ளன. இது ராஜேந்திர சோழனின் அரண்மனையின் ஒரு பகுதி என கருதப்படுகிறது.

தமிழ்நாடு மாநிலத் தொல்லியல் துறை கீழடித் தொகுதி, ஆதிச்சநல்லூர் உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தற்போது அகழாய்வில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள மாளிகை மேடு பகுதியிலும் தொல்லியல் அகழாய்வு நடத்தப்பட்டு வருகிறது. அரியலூர் மாவட்டத்தில் மீன்சுருட்டி அருகில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் சமீபத்தில் அகழாய்வு துவங்கப்பட்டது. அங்கு நடத்தப்பட்ட அகழாய்வில் சில அடி ஆழத்திலேயே செங்கற்களால் ஆன பதிமூன்று சுவர்கள் வெளிப்பட்டிருக்கின்றன. இது தவிர, சில செப்புக் காசுகள், பானை ஓடுகள், இரும்பு பொருட்கள் ஆகியவையும் இங்கிருந்து கிடைத்திருக்கின்றன. இது தவிர, சீன Seladan மட்பாண்டமும் கிடைத்திருக்கிறது.

“இப்போது ஐந்து குழிகள் மட்டும் தோண்டப்பட்டதில் 13 சுவர்கள் சுமார் நான்கைந்து மீட்டர் தூரத்திற்கு கிடைத்திருக்கின்றன. இன்னும் பத்துக்கும் மேற்பட்ட குழிகளை அமைக்கும் பட்சத்தில் பெரிய அளவிலான சுவர்களைப் பார்க்க முடியும்” என்கிறார் மாநிலத் தொல்லியல் துறையின் துணை இயக்குனர் சிவானந்தம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 13வது நூற்றாண்டுக்கு முந்தைய அரண்மனைகள் எதுவுமே தற்போது இல்லை. தற்போதுள்ள அரண்மனைகள் அனைத்துமே 16ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவை. “கோவில்களை கருங்கற்களில் கட்டிய மன்னர்கள் அரண்மனைகளை செங்கல், மரத்தில்தான் கட்டினார்கள். ஆகவே அவை அடுத்தடுத்த படையெடுப்புகளில் அழிக்கப்பட்டன” என்கிறார் சிவானந்தம்.