Home News கொரோனா ஊரடங்கு: புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் மோதி 16 பேர் உயிரிழப்பு –...

கொரோனா ஊரடங்கு: புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் மோதி 16 பேர் உயிரிழப்பு – நடந்தது என்ன?

64
0

மகாராஷ்டிரா மாநிலத்தில் 16 தொழிலாளர்கள் சரக்கு ரயிலில் மோதி பலியான சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் புலம்பெயர்ந்து வாழ்ந்துகொண்டிருந்த அந்த தொழிலாளர்கள் முடக்க நிலையின் காரணமாக சொந்த மாநிலத்துக்கு செல்லும் ரயிலில் ஏறும் நோக்கத்துடன் அருகிலுள்ள ரயில் நிலையத்தை நோக்கி நடந்து சென்றுகொண்டிருந்தனர். அப்போது, அதிகாலை நேரத்தில் தண்டவாளத்தில் படுத்துறங்கி கொண்டிருந்த 16 தொழிலாளர்கள் மீது அவ்வழியாக சென்ற சரக்கு ரயில் ஏறியதில், தொழிலாளர்கள் அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கொரோனா வைரஸின் பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்தியா முழுவதும் முடக்க நிலை அமல்படுத்தப்பட்டுள்ளதால், புலம்பெயர் தொழிலாளர்கள் பலரும் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்களுக்கு அப்பால் உள்ள சொந்த ஊர்களுக்கு நடைப்பயணமாகவே சென்று வருகின்றனர்.
இந்த நிலையில், முடக்க நிலையால் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியால் தவிப்பவர்களுக்கு உதவும் வகையில், கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
அந்த சிறப்பு ரயில்களில் ஒன்றில், சொந்த ஊர்களுக்கு செல்லலாம் என்ற திட்டத்தில் இருந்தபோதே இந்த தொழிலாளர்கள் அனைவரும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் கிராமப்புற பகுதிகளை சேர்ந்த மக்கள் நல்ல வருமானத்தை தரும் வேலைவாய்ப்புகளை பெறும் நோக்கத்தில் பெருமளவில் நகர்ப்புற பகுதிகளுக்கும், மற்ற மாநிலங்களுக்கும் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். ஒளரங்காபாத் நகரை நோக்கி முதலில் சாலை மார்க்கமாக சென்றுகொண்டிருந்த இந்த தொழிலாளர்கள், பிறகு ரயில் பாதையில் நடக்க தொடங்கியதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறாக, சுமார் 36 கிலோ மீட்டர் தூரம் நடந்த 16 தொழிலாளர்களும், ஒருகட்டத்தில் சோர்வடைந்ததால் ஓய்வெடுக்க திட்டமிட்டனர். முடக்க நிலையின் காரணமாக ரயில்கள் வராது என்று கருதிய அவர்கள், தண்டவாளத்தில் படுத்துறங்க துவங்கியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபத்து நடந்தேறிய பகுதியில் தொழிலாளர்கள் உண்பதற்காக வைத்திருந்த உணவுப்பொருட்கள் சிதறி கிடக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வலம் வருகிறது. கடந்த மார்ச் 24ஆம் தேதியன்று எவ்வித கால அவகாசமும் கொடுக்காமல் இந்தியாவில் முடக்க நிலை அமல்படுத்தப்பட்டதால், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலர் தாங்கள் பட்டினியில் வாடக்கூடும் என்று அஞ்சி தங்கள் சொந்த கிராமங்களுக்குத் திரும்பிச் செல்ல முயன்றனர்.

பேருந்து மற்றும் ரயில் சேவைகளும் அன்றைய இரவே நிறுத்தப்பட்டதால், பலருக்கு நடப்பதைத் தவிர வேறு வழியில்லை. அவர்களின் அவலநிலை நாடு முழுவதும் மக்களிடையே சீற்றத்தை ஏற்படுத்தியது.

இந்த மாத தொடக்கத்தில் முடக்க நிலை கட்டுப்பாடுகளை தளர்த்தியதன் மூலம், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகளில் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்ப வழிவகை செய்யப்படுவதாக மத்திய, மாநில அரசுகள் அறிவித்தன.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோதி, “மகாராஷ்டிராவின் ஒளரங்காபாத்தில், நிகழ்ந்த ரயில் விபத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்ததை எண்ணி மிகுந்த வேதனையடைந்தேன். இதுதொடர்பாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுடன் பேசினேன். அவர் நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகிறார். தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன” என்று அவர் தெரிவித்துள்ளார்.