Home உலகம் அதிகாரத்தை பெற ஒன்றிணைந்து செயல்பட வலியுறுத்திய இந்திய வெளிவிவகார செயலாளர்

அதிகாரத்தை பெற ஒன்றிணைந்து செயல்பட வலியுறுத்திய இந்திய வெளிவிவகார செயலாளர்

37
0

இலங்கை மத்திய அரசாங்கத்திடமிருந்து தமிழர்களுக்கான அதிகாரங்களை பெற்றுக்கொள்வதற்கு அனைத்து சிறுபான்மை சமூகமும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதனை இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன ஷ்ரிங்லா வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை தமிழ் மக்கள் பிரதிநிதிகளுடனான சந்திப்பு கொழும்பில் நேற்று (அக்டோபர் 4) நடைபெற்றது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளை, இந்திய வெளிவிவகார செயலாளர் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார். தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து, அவர் தம்மிடம் கேட்டறிந்து கொண்டதாக சந்திப்பில் கலந்து கொண்ட கட்சி பிரதிநிதிகள் பிபிசி தமிழிடம் தெரிவித்திருந்தனர்.

தேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்த இலங்கை அரசாங்கம் முயற்சித்து வருகின்ற நிலையில், அது சிறுபான்மை சமூகத்தை பெரிதும் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நிர்வாகிகள், இந்திய வெளியுறவுத்துறையிடம் தெரிவித்தனர் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், ராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான், பிபிசி தமிழிடம் குறிப்பிட்டார். மாகாண சபையில் இந்திய வம்சாவளி தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி, 25 பிரதிநிதிகள் உள்ளதாகவும், புதிய தேர்தல் முறைமையில் அது 2 அல்லது 3ஆக குறையும் அபாயம் காணப்படுவதாகவும் தாம், இந்திய அதிகாரியிடம் சுட்டிக்காட்டியதாக அவர் கூறினார்.

இந்த பிரதிநிதித்துவம் நாடாளுமன்றம் மற்றும் உள்ளுராட்சி சபை தேர்தல்களிலும் பாதிப்பை ஏற்படுத்தும். இவ்வாறான புதிய தேர்தல் முறைமை அமல்படுத்தப்படும் பட்சத்தில், தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் முழுமையாக இல்லாது போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.