Home க்ரைம் காஞ்சி: வடமாநில தொழிலாளி மீது சரமாரி தாக்குதல் – இருவர் கைது

காஞ்சி: வடமாநில தொழிலாளி மீது சரமாரி தாக்குதல் – இருவர் கைது

11
0

காஞ்சிபுரம் அருகே பணிக்குச் சென்று வீடு திரும்பிய வட மாநில தொழிலாளியை கத்தியால் தாக்கி பணம் செல்போன் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் நீர் வல்லூர் பகுதியில் உள்ள எல்&டி தொழிற்சாலையில் பணிபுரிந்து வருபவர் கப்பா புருஷோத்தம். ஒரிசா மாநிலம் கஞ்சம் மாவட்டம் சம்பந்தபள்ளி பகுதியை சேர்ந்த இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக காஞ்சிபுரம் அருகே இந்த தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் வடமாநில தொழிலாளியான கப்பா புருஷோத்தம் பணிக்கு சென்று விட்டு அவரது வீட்டிற்கு திரும்பி உள்ளார். அப்போது நீர் வல்லூர் கூட்டு சாலை பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் அந்த வட மாநில தொழிலாளியை கத்தியால் சரமாரியாக தாக்கி விட்டு அவரிடம் இருந்து 2000 ரூபாய் பணம் மற்றும் செல்போனை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர்.

அதில் தலை மற்றும் கைப்பகுதியில் வெட்டு காயம் அடைந்த கப்பா புருஷோத்தம்மை அங்கிருந்த தொழிலாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழிப்பறி கொள்ளை சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பேசில் பிரேம் ஆனந்த்,சப் இன்ஸ்பெக்டர் துளசி மற்றும் போலீசார் சம்பவ உடனடியாக விசாரணை மேற்கொண்டு சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சந்தேகத்திற்கிடமான வகையில் சென்ற இரு சக்கர வாகனங்களை நிறுத்தி வாகன சோதனையை மேற்கொண்டனர்.

அப்போது போலீசாரின் இந்த வாகன சோதனையில் சந்தேகத்திற்கிடமான வகையில் இரு சக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்களை மடக்கி பிடித்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் அவர்கள் மேட்டு பரந்தூர் கிராமத்தை சேர்ந்த குணசேகரன், அவனது உறவினர் லோகேஷ் என்பதும் இருவரும் கப்பா புருஷோத்தமனை கத்தியால் தாக்கி விட்டு பணத்தையும் செல்போனையும் பறித்து சென்றதும் போலீசாருக்கு தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட இந்த இரு இளைஞர்களையும் கைது செய்து அவர்களிடமிருந்து 12 செல்போன்கள், இருசக்கர வாகனம்,2 ஆயிரம் ரூபாய் பணம், தாக்குதலுக்கு பயன்படுத்திய கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.