பாராலிம்பிக் நீச்சல் போட்டியில் 4 தங்கப் பதக்கம்: இரண்டு கைகளும் இல்லாத சீன வீரர் ஜெங் தாவோ சாதனை

சீனாவை சேர்ந்த ஜெங் தாவோவுக்கு 30 வயது. ஒரு மின்சார ஷாக்கில் தமது இரண்டு கைகளையும் இழந்த இவர், டோக்யோ பாராலிம்பிக் நீச்சல் போட்டிகளில் 4 தங்கப் பதக்கங்களை அள்ளினார்.

“என்னைப் பார் மகளே, கைகள் இல்லாவிட்டாலும் என்னால் வேகமாக நீந்த முடிகிறது!” என்று ஒரு போட்டிக்குப் பிறகு தமது மகளுக்கு அனுப்பிய ஒரு வீடியோ மெசேஜில் கூறினார் ஜெங். குழந்தையாக இருக்கும்போதே தமது கைகளை இழந்த ஜெங், டோக்யோ பாராலிம்பிக் போட்டியில் ஃப்ரீஸ்டைல், பேக்ஸ்ட்ரோக், பட்டர்ஃபிளை நீச்சல் பிரிவுகளில் ஆதிக்கம் செலுத்தி பதங்கங்கள் வென்றார். இவை அனைத்துமே உலக சாதனை அல்லது பாராலிம்பிக் போட்டி அளவிலான சாதனைகள்.

புதன்கிழமை நடந்த 50 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல் நீச்சல் இறுதிப் போட்டியில் அவர் நிகழ்த்திய பாராலிம்பிக் போட்டி அளவிலான சாதனையை சீனாவின் சமூக ஊடகங்களில் கொண்டாடித் தீர்த்துவிட்டனர். காரணம் கோடைகால பாராலிம்பிக் போட்டிகளில் சீனா வென்ற 500வது தங்கப் பதக்கம் இது. 1984ம் ஆண்டு நியூயார்க் நகரில் நடந்த பாராலிம்பிக் போட்டியில் முதல் முதலாக சீனா பங்கேற்றது. இந்தப் போட்டியில் தங்கம் வென்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜெங், “டோக்யோ 2020 பாராலிம்பிக் போட்டிதான் என் கடைசி பாராலிம்பிக் போட்டியாக இருக்கும் என்பதால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் முழு முயற்சியையும் மேற்கொண்டேன். இதுதான் இதுவரை நான் பங்கேற்ற பாராலிம்பிக் போட்டிகளிலேயே எனக்கு மிகவும் சிறப்பாக அமைந்தது,” என்றார்.

முன்னதாக, 50 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் நீச்சல் போட்டியில் ஓர் உலக சாதனை படைத்தார் ஜெங். அந்த தூரத்தை அவர் 31.42 விநாடிகளில் நீந்திக் கடந்தார். இந்தப் போட்டிக்குப் பிறகுதான் அவர் தனது இரண்டு வயது மகளிடம் வீடியோ கால் மூலம் உணர்ச்சிபூர்வமாக பேசினார். இந்த வீடியோதான் பிறகு வைரலாக பகிரப்பட்டது.

இந்த போட்டிக்காக நீச்சல் குளத்தில் வாயில் ஒரு ஷீட்டைக் கவ்விக் கொண்டிருந்த அவர் தம்மை உதைத்துத் திருப்பிக் கொண்டதைப் பார்த்த சமூக ஊடகப் பயனர்கள் அவரது உடல் வலுவைப் பார்த்து ஆச்சரியத்தை வெளியிட்டனர். அவர் தங்களுக்கு ஊக்கம் தருவதாகவும், பெருமிதமாக இருப்பதாகவும் அவர்கள் கூறினர்.

Previous post ஆப்கானிஸ்தானில் இருந்து பிரிட்டிஷ் படைகள் முழுமையாக வெளியேறின – தூதர் நாடு திரும்பினார் – sigappanada.com
Next post தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று: ஸ்டாலின் வெளியிட்ட 60 அறிவிப்புகள் – உதயநிதிக்கு புதிய பதவி, நகைக்கடன் தள்ளுபடி