மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி: இறப்புகளை 95% குறைத்து சாதித்த பிரேசில் நகரம் – sigappanada.com

பிரேசிலிலுள்ள நகரம் ஒன்றில் கிட்டத்தட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்திய பிறகு அங்கு பெருந்தொற்றால் ஏற்படும் உயிரிழப்பு 95 சதவீதம் குறைந்துள்ளது. சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி குறித்து ஆராய்ச்சியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

சுமார் 45,000 மக்கள் வாழும் பிரேசிலின் செஹானா நகரில் 18 வயதிற்கு மேற்பட்ட கிட்டத்தட்ட அனைவருக்கும் சீனாவில் தயாரிக்கப்பட்ட கொரோனாவாக் தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு, கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் பெருமளவில் குறைந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக, தடுப்பூசி போட்டுக்கொள்ளாத சிலரும் நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து பாதுகாக்கப்பட்டதாக ஆய்வு முடிகள் சுட்டிக்காட்டுகின்றன.

ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழும் மக்களில் 75 சதவீதத்தினருக்கு தடுப்பூசி செலுத்துவதன் மூலம் பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியுமென்று இந்த ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவுக்கு பிறகு கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்ட உலகின் இரண்டாவது நாடாக பிரேசில் உள்ளது, அங்கு இதுவரை கோவிட்-19 நோய்த்தொற்றால் சுமார் 4,63,000 பேர் உயிரிழந்துள்ளனர்.

அந்த நாட்டின் தேவையை விட தடுப்பூசி உற்பத்தி மற்றும் கொள்முதல் மிகவும் குறைவாக உள்ள நிலையில், நோய்த்தொற்று பரவலும், உயிரிழப்பும் தொடர்ந்து உச்சபட்ச நிலையிலேயே இருக்கின்றன. நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த நாடுதழுவிய அளவில் ஒருங்கிணைந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்ற குற்றச்சாட்டு அங்கு முன்வைக்கப்படுகிறது.

Previous post `கொரோனா துயரத்தில் உங்களுக்கு மாளிகை அவசியமா?’ – பிரதமரை சாடிய முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள்
Next post கொரோனா மூன்றாம் அலை ஆகஸ்ட் மாத இறுதியில் இந்தியாவைத் தாக்கலாம் – ஐ.சி.எம்.ஆர்