
அமெரிக்கா: டாலரின் அதிகாரம் வீழ்கிறதா? சீனா மற்றும் ரஷ்யா செய்யும் அரசியல்
அமெரிக்க நாணய மதிப்பான டாலர், “உலகளாவிய நாணயம்” என்ற அடையாளத்தை பெற்றுள்ளது. டாலர் மற்றும் யூரோ – சர்வதேச வர்த்தகத்தில் மிகவும் பிரபலமானவை மற்றும் ஏற்றுக்கொள்ளப்படுபவை. உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் வைத்திருக்கும் அன்னிய செலாவணி இருப்பில் 64 சதவிகிதம், அமெரிக்க டாலர்களாகும்.
அத்தகைய சூழ்நிலையில், டாலரே உலகளாவிய நாணயமாக உள்ளது. இது, அதன் வலிமை மற்றும் அமெரிக்க பொருளாதார பலத்தின் அடையாளமாகும்.
சர்வதேச தர நிர்ணய அமைப்பின் (இண்டர்நேஷ்னல் ஸ்டாண்டர்ட் ஆர்கனைஸேஷன்) பட்டியலின்படி, உலகளவில் 185 நாணயங்கள் உள்ளன. இருப்பினும், இந்த நாணயங்களில் பெரும்பாலானவை, தனது நாட்டிற்குள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. உலகெங்கிலும் ஒரு நாணயம் எத்தனை பிரபலமாக உள்ளது என்பது, அந்த நாட்டின் பொருளாதாரம் மற்றும் வலுவை பொறுத்தது.
உலகின் இரண்டாவது சக்திவாய்ந்த நாணயம் யூரோ. உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகளின் அந்நிய செலாவணி இருப்புக்களில் 19.9 சதவீதம் யூரோ ஆகும்.
டாலரின் வலிமை மற்றும் அங்கீகாரம், அமெரிக்க பொருளாதாரத்தின் வலிமையை பிரதிபலிக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. மொத்த டாலரின் 65 சதவீதம் , அமெரிக்காவிற்கு வெளியே பயன்படுத்தப்படுகிறது.
உலகளவில் 85 சதவிகித வர்த்தகத்தில் டாலரின் ஆதிக்கம் உள்ளது. உலகில் 39 சதவிகித கடன்கள், டாலர்களில் கொடுக்கப்படுகிறது. ஆகவே, வெளிநாட்டு வங்கிகளுக்கு, சர்வதேச வர்த்தகத்திற்கு டாலர்கள் தேவை.
டாலரைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ரஷ்யாவும் சீனாவும் ஒன்றிணைந்து வருகின்றன. இது இரு நாடுகளுக்கும் இடையில் ஒரு ‘நிதி கூட்டணிக்கு’ வழிவகுக்கும் என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர்.
டாலர் உலகளாவிய நாணயமாக இருப்பது ஏன்?
1944 ஆம் ஆண்டு, பிரெட்டன் உட்ஸ் ஒப்பந்தத்தைத் தொடர்ந்து டாலரின் நடப்பு வலுவடைதல் ஆரம்பமானது. அதற்கு முன், பெரும்பாலான நாடுகள் தங்கத்தை மட்டுமே ,சிறந்ததாகக் கருதின. அந்த நாடுகளின் அரசுகள் தங்கத்தின் தேவையின் மதிப்பின் அடிப்படையில், தங்கள் நாணயத்தை முடிவு செய்வதாக உறுதியளித்தன. நியூ ஹாம்ஷயரின், பிரெட்டன் உட்ஸில் உலகின் வளர்ந்த நாடுகள் கூடி, அமெரிக்க டாலருக்கு எதிரான அனைத்து நாணயங்களின் பரிமாற்ற வீதத்தை நிர்ணயித்தன. அந்த நேரத்தில், உலகின் மிக அதிக தங்க இருப்பு , அமெரிக்காவிடம் இருந்தது. தங்கத்திற்கு பதிலாக, டாலரின் மதிப்பிற்கு ஏற்ப தங்கள் நாணயத்தை முடிவு செய்ய, இந்த ஒப்பந்தம் மற்ற நாடுகளுக்கு அனுமதி அளித்தது.
1970 களின் முற்பகுதியில், பல நாடுகள் டாலருக்கு பதில் தங்கம் கோரத் தொடங்கின, ஏனெனில் ,பணவீக்கத்தை எதிர்த்துப் போராட இது தேவைப்பட்டது. அந்த நேரத்தில், அமெரிக்காவின் ஃபோர்ட் நாக்ஸ் (தங்க காப்பகம்), தனது இருப்புக்களை கலைக்க அனுமதிப்பதற்கு பதிலாக, டாலரை தங்கத்திலிருந்து பிரித்தார், அதிபர் நிக்சன்.
அதற்குள், டாலர் உலகின் மிகவும் பாதுகாப்பான நாணயமாக மாறியது.