குர்மீத் ராம் ரஹீம் சிங்: இன்னொரு கொலை வழக்கிலும் சாமியாருக்கு ஆயுள் தண்டனை – யார் இவர்?

டேரா சச்சா சௌதா அமைப்பின் தலைவர் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு, அந்த அமைப்பின் முன்னாள் ஊழியர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பஞ்ச்குலாவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஒன்று டேரா சச்சா சௌதாவில் நிர்வாகப் பொறுப்பில் இருந்த ரஞ்சித் சிங் என்ற முன்னாள் ஊழியர் கொல்லப்பட்ட வழக்கில் ராம் ரஹீம் சிங் மற்றும் வேறு நான்கு பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. ஒரு பாலியல் வல்லுறவு வழக்கிலும், ஊடகவியலாளர் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கிலும் குர்மீத் ராம் ரஹீம் ஏற்கனவே தண்டனை பெற்று சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ராம் ரஹீமுக்கு 31 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

ராம் ரஹீம் சிங் 1967ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கங்காநகர் மாவட்டத்தில் பிறந்தார். 1948ஆம் ஆண்டு ஷா மஸ்தானா பலூசிஸ்தானி என்பவரால் நிறுவப்பட்டிருந்த டேரா சச்சா சௌதா அமைப்பில் இவரது குடும்பத்தினர் ஈடுபாடு கொண்டிருந்ததால் சிறுவயதிலேயே அந்த அமைப்பில் சேர்ந்து பணியாற்றி வந்தார் ராம் ரஹீம் சிங்.

கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், ரத்த தான முகாம்கள் நடத்துதல், ஏழைகளுக்கு உதவி பொருட்கள் வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் அமைப்பு அதைப் பின்பற்றுபவர்களால் சமூக சேவை அமைப்பாகவும், ஒரு மதப் பிரிவாகவும் கருதப்படுகிறது. 1990ஆம் ஆண்டு டேராவின் தலைமை பொறுப்புக்கு வந்தார் ராம் ரஹீம் சிங். தொடக்க காலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்து வந்த ராம் ரஹீம் சிங், தண்டனை பெறுவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிப்படையாக பாரதிய ஜனதா கட்சிக்கு தமது ஆதரவை தெரிவித்திருந்தார்.

Previous post அதிகாரத்தை பெற ஒன்றிணைந்து செயல்பட வலியுறுத்திய இந்திய வெளிவிவகார செயலாளர்
Next post ‘சாதனைனா இப்படி இருக்கணும்’…ரிஷப் தரமான ரெக்கார்ட்: பகலிரவு டெஸ்டில் ஷ்ரேயஸ் சரித்திரம்!