மாவட்டம்
Now Reading
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ்
0

பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ்

by editor sigappunadaJune 22, 2017 1:23 pm

 

டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது.

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு மதுபான கடைகளும், அனுமதி பெற்ற பார்களும் ஏற்கனவே செயல்பட்டு வந்தது. பின்னர் உச்சநீதிமன்ற உத்தரவின்படி சின்னசேலம் நகரத்தில் இருந்த 5 மதுபான கடைகளும், கனியாமூர் கிராம பகுதியில் இருந்த மதுபான கடையும் அதிரடியாக மூடப்பட்டன. மேலும் அங்கு செயல்பட்டு வந்த பார்களுக்கும் கலால் தனிவட்டாட்சியர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது மேல்நாரியப்பனூர், வரதப்பனூர், ராயப்பனூர் ஆகிய 3 கிராமத்தில் மட்டுமே அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் சின்னசேலம் நகர பகுதிக்குட்பட்ட கூகையூர் செல்லும் சாலையில் தனியார் அரிசி ஆலை எதிரே கடந்த 10 நாட்களுக்கு முன்பு அரிசி ஆலை ஊழியர்களின் எதிர்ப்பை மீறி புதிதாக அரசு மதுபான கடை ஒன்று திறக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த மதுபான கடை பகுதியில் பார் செயல்பட அரசு அனுமதி வழங்கவில்லை. இதனிடையே அதே பகுதியில் மதுபான கடை அருகே பச்சைகலர் துணியால் மூடிய நிலையில் கள்ளத்தனமாக பார் திறந்து மதுவிற்பனை நடைபெறுகிறது. சின்னசேலம் நகர பகுதியில் தனியார் ஓட்டல் மற்றும் லாட்ஜ் பகுதியில் அரசு அனுமதி பெற்று ஒரு இடத்தில் மட்டும் மதுபான பார் செயல்பட ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி தனியார் பாரும் அப்போதே மூடப்பட்டன.

ஆனால் அரசு மதுபான கடை மூடப்பட்டுள்ள பகுதியில் உள்ளூர் போலீசார் மற்றும் கள்ளக்குறிச்சி மதுவிலக்கு போலீசார் அனுமதியோடு கூகையூர்ரோடு பகுதி, அண்ணாநகர் பகுதி,  நயினார்பாளையம் செல்லும் சாலை ரயில்வேகேட் பகுதி, சின்னசேலம் காவல்நிலையம் அருகில், திரவுபதியம்மன்கோயில் அருகே, சேலம் மெயின்ரோடு பேருராட்சி வணிக வளாகம் பகுதி, வாரசந்தை மேடு, கனியாமூர் கிராம பகுதி உள்ளிட்ட 12 இடங்களில் திருட்டுத்தனமாக இரவு, பகலாக மதுவிற்பனை படுஜோராக நடக்கிறது. திருட்டுத்தனமாக மது விற்பனை செய்யப்படும் சில பாரில், வெளிமாநிலங்களில் தயாரிக்கப்படும் போலி மதுபானத்தை ரூ.70க்கு வாங்கி வந்து ரூ.140க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுமட்டுமின்றி சின்னசேலம் நகர பகுதியில் பைக்கில் ஒருவர் நடமாடும் மது விற்பனை செய்து வருகிறார்.

இவற்றை கண்டுகொள்ளாமல் இருக்க உள்ளூர் போலீசார் தினமும் ரூ.3 ஆயிரமும், கள்ளக்குறிச்சி கலால் போலீசார் வாரந்தோறும் ரூ.5 ஆயிரமும் மாமூல் வசூலிக்கிறார்களாம். இந்த மாமூல் கணக்கு ஒருமாதத்திற்கு மட்டும் சுமார் ரூ.9 லட்சத்தை தாண்டுகிறது.

இதுதவிர சின்னசேலம் அருகில் உள்ள தென்செட்டியந்தல், பைத்தந்துறை, பங்காரம், தெங்கியாநத்தம், எலவடி, நாககுப்பம், திம்மாபுரம், கல்லாநத்தம், பாக்கம்பாடி, வி.கூட்ரோடு பகுதியில் 3 இடங்கள் என 10 கிராமங்களில் சாராய விற்பனை மும்முரமாக நடக்கிறது.

சாராயம் விற்பதற்கு மாமூலாக உள்ளூர் போலீசார் ஒருவர் மாதந்தோறும் ரூ.15 ஆயிரமும், மற்றொருவர் ரூ.7500ம், கள்ளக்குறிச்சி மதுவிலக்கு போலீசார் மாதம் ரூ.5 ஆயிரமும் வசூலித்து வருவதாக கிராம மக்கள் புகார் எழுப்பியுள்ளனர்.

எனவே சின்னசேலம் பகுதியில் திருட்டுத்தனமாக மதுவிற்பனை செய்யும் ஆசாமிகள் மீதும், அவர்களுக்கு துணைபோகும் போலீசார் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிச்சிருங்க !
ஆதார் கட்டாயமா? இல்லையா? குழப்பும் அரசு - கோர்ட்டில் ஆதார் கட்டாயமில்லை என்று அரசு கூறுகிறது. ஆனால் ஒருபக்கம் எல்லாவற்றிற்கும் ஆதார் கட்டாயம் என்று வற்புறுத்துகிறது அரசு. ரிசர்வ் வங்கியின் ஆணைப்படி, வங்கிகளில் சேமிப்புக் கணக்கு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response