Now Reading
பேட்ரோல் போலீசாரின் அடாவடி!!
0

பேட்ரோல் போலீசாரின் அடாவடி!!

by Sub EditorJanuary 13, 2017 8:30 pm

சென்னை புறநகர் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக செயின் பறிப்பு, வழிப்பறி, திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் காலை, மதியம், மாலையில் முக்கிய இடங்களில் ரோந்து செல்லும் போலீசார் சந்தேக நபர்களை பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரிப்பார்கள்.
அப்போது அவர்கள் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள், என்ன தொழில் செய்கிறார்கள் என கேட்டறிந்து, சந்தேக வழக்கு பதிவு செய்வார்கள். அவர்களின் கைரேகைகளை பதிவு செய்து பழைய குற்றவாளிகள் ரேகையுடன் ஒப்பிட்டு பார்ப்பார்கள். அப்போது அவர்கள் பழைய குற்றவாளிகள் என தெரிந்தால் வேறு எந்தச் குற்ற செயலில் ஈடுபட்டுள்ளார்கள் என விசாரித்து நடவடிக்கை எடுப்பார்கள். இது நெடுங்காலமாக காவல்துறை நடவடிக்கையாகும்.

ஆனால், சேலையூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த ரோந்து போலீசார் சந்தேக வழக்கு என்ற பெயரில் ஒரு ஷிப்டுக்கு 10 பேர் என 3 ஷிப்டுக்கு சுமார் 30 பேர் மீது வழக்கு கட்டாயமாக போடுகிறார்கள். அதுவும் அப்பாவிகள் மீது. அவ்வாறு வழக்கு போடப்படும் நபர்கள் வேலைக்கு செல்லும் கூலித் தொழிலாளர்கள். வர்த்தக நிறுவனம், தொழிற்சாலைகளில் பல ஆண்டுகளாக வேலை பார்க்கும் தொழிலாளர்கள், ஐடி பார்க்கில் வேலை பார்ப்பவர்கள் காரில் வந்து மெயின் ரோடில் இறங்கி வீட்டிற்கோ அல்லது விடுதிக்கோ நடந்துசெல்லும் நபர்கள் போன்ற அப்பாவிகளை காவல் நிலையம் அழைத்துச் சென்று சந்தேக வழக்கு போட்டு அனுப்புகின்றனர்.
இவ்வாறு போடப் படும் சந்தேக வழக்குகளால் அப்பாவி தொழிலாளர்கள், ஊழியர்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு வேலைக்கு செல்ல முடியவில்லை. அவர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படுகிறது. இதனால் தாம்பரம்,சேலையூர் பகுதியில் குடியிருக்கும் பணியாளர்கள் அச்சத்துடனே இருக்கின்றனர்.

உண்மையான குற்றவாளிகளை தப்பிக்கவிட்டு, அப்பாவி மக்களை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து வழக்கு போட்டு தொல்லை கொடுக்கிறார்கள் என்று போலீசார் மீது பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். திருடனுக்கு பயந்து இரவில் வரத் தயங்கியவர்கள், இப்போது பேட்ரோல் போலீசராருக்கு பயந்து வரத் தயங்குகின்றனர். பொதுமக்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய போலீசே இப்படி பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கலாமா? என்று அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இப்போது தினமும் ஒரு காவல் நிலையத்தில் 10 வழக்குகள் போட வேண்டும் என்ற அடிப்படையில் அப்பாவிகளையும் பலிகடா ஆக்குகிறார்கள் என்றும் குற்றம்சாட்டப்படுகிறது. உண்மையிலேயே பொது இடங்களில் தகராறு செய்பவர்கள், சந்தேகபடும்படி நடமாடுபவர்கள் மீது வழக்கு போடுவதோ, விசாரணை செய்வதோ இல்லாமல் அப்பாவிகள் மீது தங்கள் கைவரிசையை காட்டுகின்றனர் போலிசார்.

உண்மையில்குற்றம் செய்பவர்கள் போலீசாரின் கண்களில் மண்தூவி தப்பிவிடுகின்றனர்.  ரயில்வே கிரவுண்ட் உள்ளிட்ட மறைவான இடங்களில் கஞ்சா விற்பனை, விபச்சாரத்தொழில், கள்ளக்காதல், ரவுடிகளின் கட்ட பஞ்சாயத்து போன்ற சட்டவிரோத செயல்கள் பகிரங்கமாக நடைபெறுகிறது. இது போலீசாருக்கு தெரிந்தும், அவர்களிடம் மாமூல் வாங்கிக் கொண்டு அவர்களை தப்பவிட்டு அப்பாவி நபர்களுக்கு தொல்லை கொடுப்பது என்ன நியாயம்? என்றும் கேட்கின்றனர் அப்பகுதியினர்.
இதுபற்றி போலீசாரிடம் கேட்டால், உயர் அதிகாரிகளின் கட்டாயத்தின்பேரிலேயே, சந்தேக வழக்கு, பெட்டி கேஸ் போடப்படுகிறது என்கின்றனர். உயரதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்டபோது, அப்படியொரு உத்தரவு பிறப்பிக்கவில்லை. குற்றநடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கச்சொ ல்லியிருக்கிறோம். இது குறித்து தகவல் கிடைக்கவில்லை.தவறு செய்யும் போலீசார் மீது நிச்சயம் நடவடிக்கை பாயும்” என்று கூறுகின்றனர்.

– நட்ராஜ்

 

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response