மாவட்டம்
Now Reading
பவானி ஆற்றின் குறுக்கே புதிய தடுப்பணை: கேரள அரசு அடாவடி
0

பவானி ஆற்றின் குறுக்கே புதிய தடுப்பணை: கேரள அரசு அடாவடி

by editor sigappunadaJanuary 17, 2017 6:40 pm

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சித்தூர் அருகே அகழி என்ற இடத்தில் சிறுவாணி ஆற்றின் குறுக்கே கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அணை கட்ட கேரள அரசு திட்டமிட்டது. சுமார் 900 கோடி செலவில் 500 மீட்டர் நீளத்திலும் 50 அடி உயரத்திலும் அணை கட்ட திட்டமிடப்பட்டது.

ஆனால் இதற்கு தமிழகத்தில் அனைத்து கட்சிகள் மற்றும் பொது மக்கள் சார்பில் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் இந்த திட்டத்தை கேரள அரசு கைவிட்டது. மேலும் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் வழங்கிய அனுமதியையும் திரும்ப பெற்று கொண்டது.

இந்த நிலையில் பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்ட தற்போது முயற்சித்து வருவது தமிழக மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையில் தமிழக பகுதியான அப்பர்பவானி என்ற இடத்தில் பவானி ஆறு உற்பத்தியாகிறது. அங்கிருந்து கேரள மாநிலம் முக்காலி என்ற இடம் வழியாக கேரளாவின் பல்வேறு இடங்களும் சென்று மீண்டும் தமிழகத்துக்குள் பவானி ஆறு வருகிறது.

கோவையை அடுத்த அத்திக்கடவு அருகே முள்ளி என்ற இடத்தில் பில்லூர் அணையில் பவானி ஆறு சேருகிறது. அதன்பிறகு பில்லூர் அணையில் இருந்து மேட்டுப்பாளையம் வழியாக பவானி சாகர் வழியே காவிரி ஆற்றில் கலந்து பின்னர் கடலில் சேருகிறது. தமிழகத்தின் 2-வது பெரிய ஆறு பவானி ஆறு ஆகும்.

கோவையை அடுத்த தேக்குவட்டை என்ற இடத்தில் பவானி ஆற்றின் குறுக்கே தற்போது கேரள அரசு புதிய தடுப்பணை கட்ட முயற்சித்து வருகிறது. 15 அடி உயரத்திலும், 200 மீட்டர் அகலத்திலும் தடுப்பணை கட்ட கேரள அரசு தனியார் நிறுவனத்துக்கு டெண்டர் விட்டு பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.

இதையொட்டி தடுப்பணை கட்ட அஸ்திவார பணிக்காக பொக்லைன் எந்திரம் மூலம்12 அடி ஆழத்தில் குழிகள் தோண்டப்பட்டு வருகிறது. மேலும் ஜல்லி கற்களும், கான்கிரீட் கலவை எந்திரங்களும் அணை கட்டப்படும் இடத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

கோவையில் சிறுவாணி மற்றும் பில்லூர் அணைகளில் இருந்து தான் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. தற்போது பருவ மழை பொய்த்ததால் சிறுவாணி அணை முற்றிலும் வறண்டு விட்டது. இதனால் பில்லூர் அணையில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரை வைத்து தான் கோவை மாநகராட்சி குடிநீர் தேவையை சமாளித்து வருகிறது.இந்த நிலையில் பில்லூர் அணையின் ஆதாரமாக விளங்கும் பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டினால் கோவையில் குடிநீருக்கே ஆபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்கள் மிகவும் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகும். குறிப்பாக கோவை மாவட்டம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்.

மேலும் அத்திக்கடவு-அவினாசி குடிநீர் திட்டத்துக்கும் பெரும் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. பவானி ஆற்றில் அணை கட்டினால் அத்திக்கடவு-அவினாசி திட்டத்துக்கு தேவையான நீர் இல்லாமல் போய் விடும். இதனால் இந்த திட்டமே கேள்விக்குறியாகி விடும் என்று அனைத்து கட்சியினரும், விவசாயிகளும், குற்றம் சாட்டி வருகிறார்கள்.

இதற்கிடையே பவானி ஆற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்ட ஏற்பாடுகள் செய்து வரும் கேரள அரசை கண்டித்து ம.தி.மு.க. சார்பில் கேரள மாநில எல்லையான கே.கே. சாவடியில் இன்று காலை மறியல் போராட்டம் நடக்கிறது. இதில் ஏராளமான ம.தி.மு.க.வி னர், மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்த நிலையில் தடுப்பணை கட்ட கேரள அரசு முயற்சிப்பதை கண்டித்து கோவை பெரியார் திராவிடர் கழக அலுவலகத்தில் இன்று அனைத்து கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response