Now Reading
சீட்டிங் செய்த தனியார் பள்ளி!
0

சீட்டிங் செய்த தனியார் பள்ளி!

by Sub EditorApril 17, 2017 1:33 pm

சென்னை கொடுங்கையூர் முத்தமிழ்நகர் 6-வது பிளாக்கில் “வேளாங்கண்ணி பப்ளிக் ஸ்கூல்” என்ற பெயரில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது.
பிரிகேஜி முதல் 7-ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் 1400 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் கீழ் கல்வி கற்பிப்பதாக கூறி அதற்கான கட்டணம் வசூலிதிருக்கிறது நிர்வாகம்.

ஒரு மாணவருக்கு வழங்கப்பட்ட மாற்று சான்றிதழில் (டி.சி) சி.பி.எஸ்.இ பள்ளி என்று குறிப்பிடாமல் மெட்ரிக்குலேசன் என்று குறிப்பிட்டது தெரியவந்திருக்கிறது. அந்த மாணவன் பள்ளிக்குச் சென்று கேட்டபோது, “ அதில் தவறாக வந்துள்ளது. சரிசெய்து தருகிறோம்.” என்று சமாளித்துக் கூறி அனுப்பி விட்டார்கள்.
ஆனால் அந்த மாணவன், பள்ளியின் இணைய தளத்தை பார்த்த போது அந்த பள்ளிக்கு சி.பி.எஸ்.இ அங்கீகாரம் எதுவும் வழங்கப்படவில்லை என்பது தெரிய வந்திருக்கிறது. இதையடுத்து பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். பள்ளி நிர்வாகம் தங்களிடம் சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் நடத்துவதாக கூறி மூன்று வருடமாக கட்டணம் வசூலித்ததாக பெற்றோர்கள் குற்றம் சாட்டினர். பள்ளி நிர்வாகத்தை எதிர்த்து பெற்றோர்கள் நடத்திய போராட்டம் குறித்து தகவல் அறிந்ததும் பெரம்பூர் எம்.எல்.ஏ பி.வெற்றிவேல் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். பெற்றோர்கள் ஏமாற்றப்பட்ட நிலையை அறிந்து பள்ளி நிர்வாகியிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

இந்த பேச்சு வார்த்தையின் போது சில பெற்றோர்களும், போலீஸ் அதிகாரியும் உடனிருந்தனர். சி.பி.எஸ்.இ. அங்கீகாரம் பெறுவதற்காக எடுத்த முயற்சி தோல்வி அடைந்ததால் அனுமதி கிடைக்கவில்லை. எப்படியும் அனுமதி கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் 3 வருடமாக சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் நடத்துவதாக கூறி மாணவர் சேர்க்கை நடத்தியதை ஒப்புக்கொண்டனர். மாணவர்களிடம் கூடுதலாக வசூலித்த கட்டணத்தை பெற்றோர் விரும்பினால் திருப்பி தருகிறோம் என்று பள்ளி நிர்வாகம் ஒப்புக்கொண்டது. இதற்கிடையில் எம்.எல்.ஏவை பற்றி ஒரு பெற்றோர் தவறான கருத்தை கூறியதால் அங்கு நின்ற சிலர் அந்த பெற்றோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பாக வெற்றிவேல் எம்.எல்.ஏ, நிர்வாகத்திடம் நடத்திய பேச்சு வார்த்தையின் போது நிர்வாகம் செய்துள்ள தவறுகளை சுட்டி காட்டியுள்ளார். இந்த நிலையில் பிரச்சினைக்குரிய அந்த பள்ளியில் மெட்ரிக்குலேசன் பள்ளி ஆய்வாளர் விசாரணை நடத்தினார். விசாரணையில் அந்த பள்ளி மெட்ரிக்குலேசன் பள்ளி அல்ல என்றும், பிரிகேஜி முதல் 5-ம் வகுப்பு வரை மழலையர் பள்ளி அனுமதிப் பெற்று செயல்பட்டு வந்துள்ளது என்றும் தெரிய வந்துள்ளது.

தொடக்கப்பள்ளி இயக்குனர் கட்டுப்பாட்டில் நர்சரி பள்ளிக்கான அங்கீகாரம் பெற்று செயல்பட்டு வருகிறது. கடந்த 3 வருடத்திற்கு முன்பு 6, மற்றும் 7-ம் வகுப்புகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. புதியதாக வகுப்புகளை தொடங்கி சி.பி.எஸ்.இ. பள்ளியாக பெயர் மாற்றம் செய்து மாணவர் சேர்க்கையை நடத்தியுள்ளது கல்வி அதிகாரியின் விசாரணையின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பள்ளி பிரச்சினை குறித்து வெற்றிவேல் எம்.எல்.ஏ, “பெற்றோர்கள் சார்பாகத்தான் பள்ளியிடம் பேச்சு வார்த்தை நடத்தினேன். அந்த பள்ளி சி.பி.எஸ்.இ பள்ளிக்கான அனுமதி பெறாமல் நடந்துள்ளது. மாணவர்களிடம் கூடுதலாக கட்டணம் வசூலித்ததை திருப்பித் தர வேண்டும் என்று கூறினேன்.

பணத்தை திருப்பி கொடுக்க கூறியதை ஏற்றுக் கொண்டார்கள். பள்ளி நோட்டீஸ் பலகையில் இது பற்றிய விவரத்தையும் வெளியிடுவதாக தெரிவித்தனர். என்னுடைய ஆதரவாளர்கள் யாரும் பள்ளிக்கு வரவில்லை. பெற்றோர்கள் ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள். குழந்தைகளின் கல்வி பாதிக்காமல், என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதனை பள்ளி செய்து தருவதாக ஒப்புக்கொண்டுள்ளது.” என்று கூறினார். பணத்தைதான் பிடுங்குகிறார்கள். கொடுக்கும் கல்வியிலும் மோசடி செய்தால் எங்கே போவது?

– மதன்

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response