பேட்டி
Now Reading
கலைந்து போக மாட்டோம்! – போராட்டக்காரர்கள் போலீசாருடன் மோதல்
0

கலைந்து போக மாட்டோம்! – போராட்டக்காரர்கள் போலீசாருடன் மோதல்

by editor sigappunadaJanuary 23, 2017 11:33 am

 

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் உடனடியாக வெளியேறுமாறு அறிவிப்பை காவல்துறை முதலில் வெளியிட்டது. இதுகுறித்து சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. ‘தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான தடையை நீக்கக்கோரி ஆயிரக்கணக்கான இளைஞர்களும் மாணவர்களும் பொதுமக்களும் கடந்த 17.01.2017 முதல் சென்னை மெரினா கடற்கரையில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளீர்கள். இந்தப் போராட்டமானது மிகவும் கட்டுப்பாடுடனும் அமைதியாகவும் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் எந்தவித இடையூறுமின்றி நடைபெற்று வந்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் சட்டம் ஒழுங்கை பேணிக் காப்பதில் சென்னை பெருநகர காவல்துறையினருக்கு அனைத்துவகையிலும் ஒத்துழைப்பு நல்கி வந்துள்ளீர்கள். தமிழக அரசின் சீரிய முயற்சியால் மக்கள் அனைவரும் விரும்பியபடி ஜல்லிக்கட்டு விளையாட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று (22-1-2017) நடைபெற்றுள்ளது. போராட்டத்துக்கான குறிக்கோள் அடையப்பட்டுள்ளதால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும் மெரினா கடற்கரையிலிருந்து உடனடியாக கலைந்து செல்லும்படி சென்னை பெருநகர காவல்துறை உங்களை கேட்டுக் கொள்கிறது.

மேலும் எவ்வாறு அமைதியான முறையில் போராட்டத்தை நடத்தினீர்களோ அதேமுறையில், காவல்துறையினருடன் ஒத்துழைத்து கலைந்து செல்லும்படி உங்களை கேட்டுக் கொள்கிறோம்’ என்றனர் . ஆனால் போராட்டக்காரர்களோ, ‘தங்களை வெளியேற்றும் பணியை தொடர்ந்தால், கடலில் விழுந்து தற்கொலை செய்துகொள்வோம்’ என, மெரினா கடற்கரையில் உள்ள போராட்டக்காரர்கள் காவல்துறையினருக்கு மிரட்டல் விடுத்தனர்.

இன்று காலை ஆறு மணியளவில் மெரினாவில் இருந்த போராட்டக்காரர்களை வெளியேற்றும் பணி தொடங்கியது. இதற்காக சுமார் 5000 காவலர்கள் அந்தப் பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர். போராட்டக்காரர்களில் ஒரு பகுதியினரை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றிய பின்னர், போராட்டக்காரர்களில் ஒரு பகுதியினர் மெரினா கடல் பகுதியில் வரிசையாக மனிதச்சங்கிலி அமைத்து நின்றனர். மேலும் சிலர் கடலுக்குள் இறங்கி நின்று போராட்டம் நடத்தினார்கள். தங்களை வெளியேற்ற காவல்துறை முயன்றால், கடலுக்குள் தற்கொலை செய்து கொள்வோம் என மிரட்டல் விடுத்தனர். இதைத் தொடர்ந்து வெளியேற்றும் பணியை நிறுத்துவதாகவும் பேச்சுவார்த்தைக்கு வருமாறும் காவல்துறையினர் அறிவித்தனர். பின்னர், அந்தப் பகுதியிலிருந்து காவல்துறையினர் வெளியேறினர். இதைத் தொடர்ந்து, கடலை ஒட்டியுள்ள பகுதியில் போராட்டக்காரர்கள் அமர்ந்து போராடத் தொடங்கினர். வேறுவழியின்றி போலீசார் தடியடி நடத்தி மெரினாவில் இருந்த இளைஞர்களை கலைத்தனர். சாலையில் பல்வேறு இடங்களிலும் அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால் போலீசாருக்கும், போராட்டம் செய்பவர்களுக்கும் இடையே பெரும் மோதல் வெடித்தது. தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் அமர்ந்தும் சிலர் போராட்டம் நடத்தினார்கள். இதனால் தி.நகரில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. ஜி.ஆர் .டி. நகைக்கடை எதிரே உள்ள சாலையில் அமர்ந்து மறியல் செய்து வருகிறார்கள்.

கோவை வ.உ.சி. மைதானத்தில் போரட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இதில் பத்துப்பேர் காயமடைந்துள்ளனர். திருச்சி மற்றும் கும்பகோணம் ஆகிய பகுதிகளில் காவல்துறையினரின் அறிவிப்பையடுத்து, அவர்களாகவே போராட்டத்தை முடித்துக் கொண்டனர். மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள போராட்டக்காரர்களை அமைதியாக கலைந்து செல்லுமாறு காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மதுரை செல்லூர் பகுதியில் முற்றுகையிடப்பட்ட ரயிலை விடுவிக்க, போராட்டக்காரர்கள் மறுத்து வருகின்றனர். மதுரை, அலங்காநல்லூர் கிராமத்தில் 600க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டத்தைக் கைவிட மறுக்கும் அலங்காநல்லூர் மக்கள் மனிதச் சங்கிலி அமைத்துள்ளனர். அருகில் உள்ள கிராம மக்களும் அங்கு கூடி வருகின்றனர். வேலூர் மற்றும் சேலத்தில் போராட்டக்காரர்கள் காவல்துறையினரால் குண்டுக்கட்டாக வெளியேற்றியுள்ளனர். இதேபோல், தமிழகத்தின் பல பகுதிகளிலும் காவல்துறையினர் போராட்டக்காரர்களை வெளியேற்ற கடுமையான முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response