பேட்டி
Now Reading
இரட்டை இலை முடக்கம் குறித்து டி.டி.வி.தினகரன் பேட்டி!
0

இரட்டை இலை முடக்கம் குறித்து டி.டி.வி.தினகரன் பேட்டி!

by editor sigappunadaMarch 23, 2017 12:49 pm

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் தோழியாக இருந்த வி.கே.சசிகலா தலைமையில் ஓர் அணியும், நீதிமன்ற வழக்குகளில் ஜெயலலிதா தண்டனை பெற்று சிறை சென்றபோதும், அவர் மரணத்துக்குப் பிறகும் முதலமைச்சராக பதவி வகித்த ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மற்றோர் அணியும் பிரிந்தன.

இந்நிலையில், மறைந்த முன்னாள் முதலைமைச்சர் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றிபெற்ற ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவித்தது. இதில் ஓ.பன்னீர்செல்வத்தின் அணியில் இருந்து மதுசூதனனும், சிறையில் உள்ள வி.கே.சசிகலா அணி தரப்பில் டி.டி.வி.தினகரனும் போட்டியிட உள்ளனர். இரு தரப்பினருமே அதிமுக-வின் இரட்டை இலை சின்னத்தைத் தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தனர். இதனால், ஏற்பட்ட குழப்பத்தை தவிர்க்கும்பொருட்டு தேர்தல் ஆணையம் நேற்று அதிமுக-வின் சின்னமான இரட்டை இலை சின்னத்தை தற்காலிகமாக முடக்கி வைப்பதாக அறிவித்தது.

இரட்டை இலையை முடக்கியதும், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு டி.டி.வி.தினகரன் பதிலளித்துப் பேசினார். அப்போது அவர், “அதிமுக-வின் இரட்டை இலை சின்னம் முடக்கப்படுவது இது முதன்முறை அல்ல. 1989-ல் ஜெயலலிதா அவர்கள் இதுபோன்ற பிரச்னையை எதிர்கொண்டார்கள். அதைப் போராடி 1991-ல் இரட்டை இலை சின்னத்தை மீண்டும் பெற்றார்கள். அப்போது இரட்டை இலை சின்னத்தை மீட்டு எடுத்ததைப் போல, இப்போதும் ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களின் பலத்துடன் இரட்டை இலையை மீண்டும் பெறுவோம். இப்போதுதான் சின்னம் முடக்கப்பட்டதற்கான உத்தரவு நகல் வந்தது. இதுதொடர்பான சட்டப் போராட்டத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம்” என்றார்.

“இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதற்கு பின்புலத்தில் யார் இருக்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள்?” என்று நிருபர்கள் கேட்டதற்கு, “இதற்கு பின்புலம், முன்புலம் இருப்பதைப் பற்றியெல்லாம் கவலை இல்லை. இரட்டை இலை சின்னத்தை ஜெயலலிதாவின் ஆசியோடும், எம்.ஜி.ஆரின் ஆசியோடும் அதிமுக-வின் ஒன்றரை கோடி தொண்டர்களின் பலத்துடன் சின்னத்தை மீட்டெடுத்து தேர்தலில் வெற்றி பெறுவோம்” என்றார்.

“இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதால் தேர்தலில் பாதிப்பு இருக்குமா?” என்ற கேள்விக்கு, “நிச்சயம் இந்த இடைத்தேர்தலில் பாதிப்பு ஏற்படுத்தாது. சோதனையான காலத்தில் அதிமுக-வின் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டிருக்கிறது. ஜெயலலிதா, எம்ஜிஆரின் வழியில் வந்த நாங்கள் எந்த சின்னத்திலே போட்டியிடுகிறோமோ? அந்த சின்னத்தில் ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் ஜெயலலிதாவின் அதிமுக வேட்பாளரான எனக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்வார்கள்” என்று பதிலளித்தார்.

“ஆர்.கே.நகர் தேர்தலில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளதா?” என்று கேட்டதற்கு, “நான் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் மாணவன். அவரிடம் அரசியல் பாடம் கற்றவன். அதிமுக-வின் ஒன்றரை கோடி தொண்டர்களின் ஆதரவுடன் ஆர்.கே.நகரில் மாபெரும் வெற்றி பெறுவேன். அதனால், ஆர்.கே.நகரில் நான் போட்டியிடுவதில் துளி அளவும் மாற்றமில்லை. இன்று காலை 11 மணிக்கு ஆர்.கே.நகரில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்கிறேன். நாங்கள் இதுபோன்ற அனுபவங்களைக் கடந்துதான் வந்திருக்கிறோம்” என்றார்.

“இரட்டை இலை சின்னம் பெறுவதற்கு ஆவணங்களைச் சமர்பிப்பதில் தவறிவிட்டீர்கள் என்று உணர்கிறீர்களா?”

“எல்லா ஆவணங்களையும்தான் கொடுத்தோம். ஆனால், முடிவு இப்படி வரும் என்று எதிர்பார்க்கவில்லை. இது தொடர்பாக, நாளைக்கு நீதிமன்றம் செல்லவில்லை. இன்னும் ஓரிரு நாட்கள் ஆகும்”.

“சின்னம் முடக்கப்பட்டதற்கு பின்னணியில் பாஜக இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?”

“இல்லை… அப்படி எதுவும் நினைக்கவில்லை. இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது தொடர்பாக ஓரிரு நாட்களில் முடிவு செய்வோம். தொண்டர்களின் பலத்துடன் இரட்டை இலை சின்னத்தைப் பெற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்” என்று கூறினார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response