தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று: ஸ்டாலின் வெளியிட்ட 60 அறிவிப்புகள் – உதயநிதிக்கு புதிய பதவி, நகைக்கடன் தள்ளுபடி

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று 60 முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதில், நகைக்கடன் தள்ளுபடி, இணையத்தள குற்றப் புலனாய்வுக்கு தனி மையம், மெரினா கடற்கரையில் உயிர் காப்புப் பிரிவு ஆகியவை அடங்கும்.

தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாள் இன்று நடைபெற்றது. மூன்று நாள்கள் விடுமுறைக்குப் பிறகு கூடிய இந்த கூட்டத்தில், முதலமைச்சரின் துறையான காவல்துறை மற்றும் தீயணைப்பு மீட்புப் பணித்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்துப் பேசினார்.

அப்போது பேசிய அவர், “சென்னையில் மாநில இணையதள குற்றப் புலனாய்வு மையம் அமைக்கப்படும். இதன்மூலம், இணைய வழியில் நடைபெறும் குற்றங்களை புலனாய்வு செய்யும் வகையில் தகுந்த பயிற்சி அளிக்கப்படும். இந்த மையத்தின் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான இணையவழி குற்றங்களைத் தடுக்கவும் விழிப்பு உணர்வு ஏற்படுத்தவும் தகுந்த பயிற்சி அளிக்கப்படும்,” என்றார்.

தொடர்ந்து பேசுகையில், “மெரினா கடற்கரையில் பொதுமக்கள் நீரில் மூழ்கி இறப்பதைத் தடுக்கும் வகையில் மெரினா கடற்கரை உயிர் காப்புப் பிரிவு ஒன்று தொடங்கப்படும். இதற்காக கடலோர பாதுகாப்புக் குழுமம் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையின் இணைந்து செயல்பட ஒப்பந்த அடிப்படையில் 12 மீனவர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர். மேலும், சென்னை தெற்கு மற்றும் வடக்குப் பிரிவுகளில் தீவிர குற்றவாளிகள் தடுப்புப் பிரிவு ஒன்றும் 8 கோடியே 42 லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்படும்,” என்றார்.

இதுதவிர, பொருளாதாரத்தில் பின்தங்கிய சிறார்கள் குறறச் செயலில் ஈடுபடாமல் இருப்பதற்கு 38.25 லட்சம் செலவில் சிறுவர், சிறுமியர் மன்றம் ஏற்படுத்தப்பட்டு அவர்களை நல்வழிப்படுத்தி உரிய கல்வி அளிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார். மேலும், காவல்துறையின் பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தும் பிரிவுக்காக 4 கோடியே 25 லட்சம் செலவில் 100 பள்ளிகளில் ஏற்படுத்தப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

Previous post பாராலிம்பிக் நீச்சல் போட்டியில் 4 தங்கப் பதக்கம்: இரண்டு கைகளும் இல்லாத சீன வீரர் ஜெங் தாவோ சாதனை
Next post பலதார திருமணம்: “எனக்கு பல காதலர்களும் துணைவர்களும் தேவைப்படுவது ஏன்?”